சீமான் எதை தான் விமர்சனம் செய்யவில்லை – அமைச்சர் பெரியகருப்பன்

சீமான் எதைதான் விமர்சனம் செய்யவில்லை. எந்த செயலுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடியவராக இருக்கிறார் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், வேளாண் சட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடுவோம். வேளாண் சட்டம், வேளாண் குடிக்கு மட்டும் பாதிப்பு என்பது பைத்தியக்காரத்தனம். அது ஒட்டுமொத்த நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரானது.

விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால், நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும். மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்த உற்பத்தியை பெருக்கி லாபம் ஈட்டுகின்ற நாடு எதுவோ? அதுதான் வாழும். வளரும் மனிதனை உழைப்பில் இருந்து வெளியேற்றி விட்டு சோம்பி இருக்கவைத்து கூலி கொடுப்பது என்பது மிகவும் ஆபத்தான போக்கு என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வண்ணம் அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் கூறுகையில், கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக 100 நாள் வேலைத்திட்டம் இருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், சீமான் எதைதான் விமர்சனம் செய்யவில்லை. எந்த செயலுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடியவராக இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.