பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி மையம் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!

பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் காணொலி வாயிலாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் நாடு முழுவதும் 18 வயதை கடந்த 79 சதவீதம் பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 38 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் தடுப்பூசி மையங்களைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையாத நிலையில் கொரோனா தடுப்பு வழி முறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.