தமிழகத்திற்கு வரி பகிர்வு குறைவு..1 ரூபாய் கொடுத்தால் 29 காசுகள் மட்டுமே – அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது என்று  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் அண்மையில் பேரிடர்களை சந்தித்துள்ளன. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ரூ.6,000 நிவாரணம் வழங்கியுள்ளது.

ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ.4000 வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது. ஒருபோதும் திமுக அரசால் செய்ய முடியாது என சிலரால் கூறப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெறுகின்றனர்.

பொங்கல் பரிசுத்தொகை: யார் யாருக்கு ரூ.1000 கிடையாது?

நிதி நெருக்கடிக்கு இடையே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.  தற்போது கூட பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. கடுமையான நிதி நெருக்கடியை தமிழக அரசு சிறப்பாக கையாள்கிறது.  மத்திய அரசு இதுவரை (2014-23) தமிழகத்திற்கு ரூ.4.75 லட்சம் கோடி மட்டுமே கொடுத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசு நிதி பகிர்வாக வழங்கும் ஒரு ரூபாயில் 29 பைசாவை மட்டும் தான் மத்திய அரசு திரும்ப அளிக்கிறது. அதாவது, தமிழக அரசு 1 ரூபாய் கொடுத்தால், மத்திய அரசு 29 காசுகளை மட்டுமே திருப்பி தருகிறது. மாநில அரசுக்கு உதவும் வகையில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடி அளவிற்கு மத்திய அரசு வசூலித்துள்ளது.  மற்ற மாநிலங்களை போல் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்குகிறது. மறைமுக வருவாய் குறித்து மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  தமிழகத்திற்கு மத்திய அரசின் வரி பகிர்வு குறைவாகவே உள்ளது என்றும் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் நிதி முறையாக கிடைப்பதில்லை என குற்றசாட்டை முன்வைத்து, நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மல் சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்துள்ளார்.