டி20 உலகக் கோப்பை: நியூயார்க் நகரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!

2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நியூயார்க் நகரத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து தற்போது அனைவரது எதிர்பார்ப்பும் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் மீதுதான் உள்ளது. அதன்படி, ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ம் தேதி வரை மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் மக்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆர்வத்தை அதிகரிக்க அங்கு நடத்தப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கனடா, நேபாளம், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, உகாண்டா ஆகிய நாடுகள் அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

இதற்காக தகுதி பெற்ற அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மற்றும் வீரர்கள் தேர்வில் இறங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான புதிய லோகோவையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், 2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நியூயார்க் நகரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சூர்யகுமார் யாதவுக்கு காயம்… கேப்டனாக ஜடேஜா.. நடந்தது என்ன?

கிரிக்கெட் என்றாலே இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான், வேறு எந்த அணி விளையாடினாலும், இந்த  அணிகள் மோதும் போட்டிக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த அளவுக்கு மிகப்பெரிய போட்டியாகும், கடைசியாக ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்திருந்தது. தற்போது, டி20 உலகக்கோப்பை தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி நியூயார்க்கில் நடைபெறும் என கூறப்படுகிறது.

தி கார்டியனின் கூற்றுப்படி, நியூயார்க்கில் 34,000 பேர் அமரும் திறன் கொண்ட பாப்-அப் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடத்தப்படும் என்றும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் இந்த நகரத்தில் வசிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, புதுடெல்லிக்கும் நியூயார்க்கிற்கும் இடையேயான 10-அரை மணி நேர வித்தியாசத்தை கருத்தில் கொண்டு, இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்களை கருத்தில் கொண்டு சில இந்திய போட்டிகள் அங்கு நடத்த திட்டமிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.