டெல்லி சிறையில் ஆம் ஆத்மி அமைச்சருக்கு சிகிச்சை அளித்தவர் போக்சோ குற்றவாளி.? இணையத்தில் வைரல்….

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படும் ரிங்கு எனும் நபர் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. என இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நேற்று இணையத்தில் மிக வைரலாக பரவிய வீடியோ என்னவென்றால், அது, டெல்லி திகார் சிறையில் பணமோசடி வழக்கில் கைதாகி இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ என ஒன்று வைரலானது.

இது சர்ச்சையாக பரவி வந்த நிலையில், இந்த வீடியோவில் கூறப்பட்டு இருப்பது பொய்யான தகவல், சிறையில் சத்யேந்திர ஜெயினுக்கு உடற்பயிற்சி சிகிச்சை எனப்படும் பிசியோதரபி சிகிச்சை தான் கொடுக்கப்பட்டது. என ஆம் அத்மி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இணையத்தில் வேறு ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அதில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படும் ரிங்கு எனும் நபர் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. எனவும், அவர் மீது போக்சோ சட்டத்தின் பிரிவு 6 மற்றும் ஐபிசி பிரிவு 376, 506 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் பாஜக பிரமுகர் ஷெஹ்சாத் ஜெய் ஹிந்த் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே, அமைச்சருக்கு மசாஜ் என ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி, அது மசாஜ் அல்ல பிசியோதரபி சிகிச்சை என ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளித்த நிலையில், தற்போது பரவி வரும் இந்த தகவலால் ஆம் ஆத்மி கட்சிக்கு கூடுதல் தலைவலி உண்டாக்கியுள்ளது.

Leave a Comment