பாஜகவின் ஒரு மாத கால ‘மகா ஜன்சம்பர்க்’ பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார்..!

பாஜகவின் ஒரு மாத கால ‘மகா ஜன்சம்பர்க்’ பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்குகிறார்.

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, நாட்டில் உள்ள 543 தொகுதிகளில் உள்ள மக்களை சந்திக்கும், பாஜகவின் ஒரு மாத கால ‘மகா ஜன்சம்பர்க்’ பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்குகிறார். இந்த பிரச்சாரத்தை ராஜஸ்தானின் அஜ்மீரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி தற்பொழுது முடிவடைய உள்ள நிலையில், 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் முழு முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பிரதமர் மோடியின் இந்த பிரச்சாரம் இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 51க்கும் மேற்பட்ட பேரணிகள், 500க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்கூட்டங்கள், 600க்கும் மேற்பட்ட செய்தியாளர் சந்திப்புகள் மற்றும 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் சந்திப்புகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.