விஜய் 909 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
சினிமாவில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் காதில் பரந்தூர் மக்கள் சத்தம் கேட்கவில்லையா? என த.வெ.க. தலைவர் விஜய்க்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போரட்டத்தில் ஈடுபடும் மக்களை நேற்று த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய விஜய் ” ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் சொல்வது என்னவென்றால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. விமான நிலையம் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
விஜய் பரந்தூருக்கு வருகை தந்தது குறித்து அரசியல் தலைவர்கள் பலரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அப்படி தான் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.
மக்கள் 910 நாட்கள் விமான நிலையம் அமையவேண்டாம் என போராடி வருகிறார்கள். 910-வது நாள் விஜய் போகிறார்..நான் என்ன கேட்கிறேன் என்றால் விஜய் பரந்தூருக்கு பறந்து போனாரா? அல்லது மறந்து போனாரா? இதுவரை மறந்து போன அவர் திடீரென பரந்தூருக்கு பறந்து சென்றார் என்றால் என்ன அர்த்தம்?
சினிமாவில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் எல்லாம் நம்மளுடைய காதில் பரந்தூர் மக்கள் சத்தம் கேட்கவில்லையா? சினிமா முடிந்த பிறகு இப்போது மக்கள் சத்தம் கேட்கிறதா? இது மாநில அரசு தேர்வு செய்து கொடுத்த இடம். மாநில அரசு தேர்வு செய்து கொடுத்த இடத்தை மத்திய அரசு ஏன் தேர்வு செய்தது என்றால் மீனம்பாக்கத்தில் இருந்து ஒரு இணைப்பு இருக்கவேண்டும் பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு இருக்கவேண்டும் என்பதற்காக தான்.
5,500 ஏக்கரில் ஆயிரத்திற்கும் குறைவான புஞ்சை நிலம் இருக்கிறது. உண்மையில் நான் விவசாயிகளை எதிர்த்தோ செயல்படவில்லை. நாங்களும் அவர்களுக்கு ஆதரவு தான். இதே விஜய் விவசாயிக்கு கொடுக்கும் சலுகைகளை இன்னும் அதிகமாக வழங்கவேண்டும்..அவர்கள் மேல் உள்ள வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று போராடினால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளலாம். இவ்வளவு வருஷம் இடத்தை மாற்றுங்கள் என்று சொன்னால் என்ன செய்வது? ஏன் முதல் நாளில் இதனை சொல்லவில்லை?
அந்த இடத்தில் வேண்டாம் என்றால் நீங்கள் ஒரு நல்ல இடம் சொல்லுங்கள். இவ்வளவு வருடங்கள் இது பற்றி பேசாமல் திடீரென பரந்தூருக்கு அவர் பறந்து வந்தால் அது பொது நலமா? அல்லது சுயநலமா? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.