‘கள்’ விடுதலை மாநாட்டில் பனங்கள் குடித்து சீமான் போராட்டம்!
கள்ளு குடித்து விட்டுதான், நான் கல்லூரிக்கே செல்வேன் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பூரிகுடிசையில் தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், செ.நல்லசாமி தலைமையில், கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு அறப்போராட்டம் ‘கள் விடுதலை மாநாடு’ நடைபெற்றது.
இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பனையேறும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். மேலும், இந்த மாநாட்டில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க கோரி போராட்டம் நடைபெற்றது.
மேடையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை ஓலை பட்டையில் ‘கள்’ குடித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் பனையேறும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மேடையில் பேசிய சீமான், “தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் தடை? கள் கடைக்கு அனுமதி அளித்தால், டாஸ்மாக் கடையில் வியாபாரம் குறைந்துவிடுமோ?
கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா? அருகிலிருக்கும் எல்லா மாநிலங்களிலும் கள் அனுமதி உண்டு, தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. காரணம் மற்ற மாநில முதல்வர்களுக்கு சாராய ஆலை இல்லை இங்கு இவர்களுக்கு சாராய ஆளை இருகிறது.
உயிரை குடிக்கும் விஷக்கடைகளை திறக்கும் அரசு, கள்ளுக்கடைகளை திறக்க ஏன் மறுக்கிறது? டாஸ்மாக் கடைக்கு பேக்டரி வைத்தவர், சப்ளை செய்தவர் அத்தனை பேரையும் உள்ளே தூக்கிப்போடுவேன். எந்த அதிகாரமும் நிரந்தரமில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” இவ்வாறு பேசியிருக்கிறார்.