47 அல்ல 46 தான்.! நீடித்த சர்ச்சை.., இறுதியானது ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பட்டியல்!
திமுக, நாதக வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று அதனை வாபஸ் பெரும் நாளும் நேற்று மாலை 3 மணிக்கு முடிவடைந்தது.
வேட்புமனு தாக்கல் இறுதி நாளான ஜனவரி 17வரையில் மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். திமுக சார்பில் விசி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.
அதில் ஜனவரி 18இல் வேட்புமனு பரிசீலனை நடைப்பெற்றது. அதில் 3 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று (ஜனவரி 20) பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெரும் காலம் முடிவடைந்தது. நேற்று 8 சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
இறுதியாக, திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 47 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. ஆனால் , அதில் பத்மாவதி எனும் வேற்று மாநிலத்தவர் வேட்புமனு இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து அவரது வேட்புமனு மட்டும் நேற்று மறுபரிசீலனை செய்யப்பட்டு இறுதியாக அவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டு அவரது மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இதனை தொடர்ந்து இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்களாக 46 பேர் அறிவிக்கப்பட்டனர். திமுக வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் கரும்பு விவசாயி சின்னம் கேட்டனர். அது வேறு ஒரு அரசியல் கட்சி வசம் உள்ளதால், கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட மைக் (ஒலிவாங்கி) சின்னம் அக்கட்சி வேட்பாளர் சீதாலெட்சுமிக்கு ஒதுக்கப்பட்டது.