கோலி, சூர்யாவை விட ஹர்திக் தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு!

Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்யக்குமார் யாதவை விட தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக திகழ்வார் என முகமது கைஃப்  தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி வரும் ஜூன் மாதம் 2-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி பட்டியலை அறிவித்தது. துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் எனவும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா தாக்கத்தை ஏற்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்   முகமது கைஃப் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது  தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஹர்திக் பாண்டியாவால் உலகக்கோப்பை போட்டிகளில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவை விட ஹர்திக் பாண்டியா மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் கூறுவேன்.

நான் அதற்கான விளக்கத்தையும் உங்களுக்கு தருகிறேன். கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி 82 ரன்கள் எடுத்தார். ஆனால், ஹர்திக் பாண்டியா ஒரு முக்கியமான 40 ரன்கள் எடுத்து, விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதுடன் பந்து வீச்சிலும் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ரொம்பவே உதவியது. அதைப்போலவே, கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது, ​​ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டார். தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டு இருந்த சமயத்தில் களத்தில் நின்று 82 ரன்கள் எடுத்து கொடுத்தார். தற்போது அவருடைய பார்ம் விமர்சிக்கும் வகையில் இருந்தால் கூட இதற்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் பார்ம் பார்க்கும்போது ரொம்பவே மாறுபட்ட ஒன்றாக இருந்து இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவரது சமீபத்திய கேப்டன் பொறுப்பு சில சவால்களை ஏற்படுத்தியிருக்கலாம் இதனால் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரலாம், ஆனால், என்னை பொறுத்தவரை உலகக்கோப்பை போட்டியில் துணை கேப்டன் ஹர்திக் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள்  நம்மளுடைய அணியில் இருப்பதால் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து போன்ற வலிமைமிக்க அணிகளை எதிர்கொள்ளும் போது நமக்கு பக்க பலமாக இருக்கும்” எனவும் முகமது கைஃப் அந்த பேட்டியில் தெரிவித்தார்.