#Breaking:நீட் விலக்கு:சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தேதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

சென்னை:வருகின்ற பிப்.8 ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற டெல்லி சென்று போராட வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.அதன்படி, சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றி ஆளுநருக்கே மீண்டும் அனுப்பி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் விலக்கு தொடர்பாக நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளை தவிர்த்து, மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இதனைத் தொடர்ந்து,முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு பெற்றது.

இந்நிலையில்,அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில்,நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,நீட் விலக்குக்காக நிறைவேற்றப்பட்ட மசோதா ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் புரிந்துள்ள நிலையில்,ஆளுநருக்கும்,பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் புரியாமல் போனது விந்தையாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.