அகதிகள் முகாமில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..! 50 பேர் பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு.!

இஸ்ரேல் மற்றும் காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இந்த போர் தொடர்ந்து 3 வாரமாக நடந்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் உள்ளனர்.

அதோடு இந்த போரினால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால் பல உலக நாடுகள், இரண்டு தரப்பினரிடமும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் ராணுவம் போரை நிறுத்தாமல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை வான்வெளி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி…9 பேர் மாயம்!

அந்தவகையில், தற்போது காசா பகுதியில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மிகப் பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 150 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

அதோடு, ஹமாஸ் தளபதியான இப்ராஹிம் பியாரியும் இந்த வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் போராடி வருவதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஹமாஸின் இராணுவத் திறன்களை அழிப்பதில் தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளோம்.! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இதற்கு மத்தியில் ஹமாஸின் இராணுவத்தையும் ஆளும் திறனையும் அழிக்கும் குறிக்கோளுடன் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். தற்போது காசா பகுதிக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தரைவழி ஊடுருவலை விரிவுபடுத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.