ஈரான் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு..!

ஈரானின் கெர்மான் நகரில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் , 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் காசிம் சுலேமானியின் நினைவு தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது.

1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கமால் இருந்தது. இந்நிலையில், ஈரான் நாட்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐஎஸ் அமைப்பு சம்பந்தப்பட்ட டெலிகிராம் சேனலில் இது குறித்து அறிக்கை வெளியாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரான் துணை ஜனாதிபதி முகமது மொக்பர், குண்டுவெடிப்புக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது குற்றம் சாட்டியிருந்தார். பயங்கரவாதிகளுக்கு சுலேமானியின் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார் மோக்பர் . எனினும்,  ஈரான் உள்ளூர் ஊடகங்களின்படி, தாக்குதல்களுக்கு எதிராக கெர்மன் உட்பட ஈரான் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன எனவும் இஸ்ரேல் , அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்களை மக்கள் எழுப்பியதாக கூறியுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.