ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை..தாமதமான போட்டி..! குழப்பத்தில் ரசிகர்கள்..

மழையின் காரணமாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று மற்றும் பிளேஆப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இறுதி சுற்று போட்டி இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆனால், மைதானத்தில் மழையானது விட்டுவிட்டுப் பெய்யத் தொடங்கியுள்ளதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டி நடக்குமா.? இல்லையா.? என்ற குழப்பம் ரசிகர்களிடையே வந்துள்ளது. இந்நிலையில், கட்-ஆஃப் நேரமானது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, போட்டி 9.35 மணிக்கு தொடங்கும் பட்சத்தில் ஓவர்கள் இழப்பில்லாமலும், போட்டி 11:56 மணிக்கு தொடங்கினால் இரு அணிகளும் ஐந்து ஓவர்கள் கொண்ட ஆட்டத்திலும் விளையாடுவார்கள். இதற்கான கட்-ஆஃப் நேரம் நள்ளிரவு 12.06 ஆக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மழை நின்று போட்டி தொடங்கும் பட்சத்தில், இரவு 9.45 மணிக்கு தொடங்கினால் 19 ஓவர்களும், 10.30 மணிக்கு தொடங்கினால் 15 ஓவர்களும், 11.00 மணிக்கு தொடங்கினால் 12 ஓவர்களும், இரவு 11.30 மணிக்கு தொடங்கினால் 9 ஓவர்களும், 11:56 மணிக்கு தொடங்கினால் 5 ஓவர்களும் இரு அணிகளுக்கு வழங்கப்படும் என்றும் அதையும் தாண்டி தடைபட்டால் போட்டி நாளை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.