”ஐசிசி உலககோப்பை – அகமதபாத்தில் விளையாட மாட்டோம்”.. பாகிஸ்தான் திட்டவட்டம்!

அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடமாட்டோம் என ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவிப்பு.

2023-ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரானது வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் சுமார் பத்து அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை தொடருக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை, ஏனென்றால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இதுவரை குழப்பங்கள் நீடித்து வருகிறது.

பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் தாங்கள் பங்கேற்க மாட்டோம் என இந்தியா அறிவித்ததற்கும் இந்த பிரச்சனை ஒரு காரணம். இதனை தீர்க்க பாகிஸ்தான் யோசனையும் நிராகரிக்கப்பட்டது. இதனால், ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் நாங்கள் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்தது.

இதன்பின்னர், ஐசிசி நடத்திய ஆலோசனையில், தாங்கள் விளையாடும் போட்டியை தென்னிந்தியாவில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இந்தாண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகளை, அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடமாட்டோம் என ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பிரச்னையை காரணம் காட்டி அங்கு விளையாட முடியாது என தகவல் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் விளையாட ஒப்புக்கொள்வதற்கு காலம் தாழ்த்துவதால் அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவுகிறது. எனவே, இதற்கு ஒரு சுலபமான முடிவு எட்டப்பட்டு, ஐசிசி வரும் வாரத்திற்குள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.