சேவாக் உட்பட 3 ஜாம்பவான்களை ஹால் ஆஃப் ஃபேமில் சேர்த்த ஐசிசி..!

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த தொடக்க வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார். சேவாக் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் இக்கட்டான சூழ்நிலையில் போட்டியின் போக்கை பலமுறை மாற்றியுள்ளார். வீரேந்திர சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டை பயமின்றி விளையாட கற்றுக்கொடுத்தார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரேந்திர சேவாக்கிற்கு பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது. ஐசிசி “ஹால் “ஆஃப் ஃபேம்” பட்டியலில் சேவாக் இடம்பிடித்துள்ளார். சேவாக் தவிர, இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜி மற்றும் இலங்கை ஜாம்பவான் அரவிந்த டி சில்வா ஆகியோரும் ‘ஹால் ஆஃப் ஃபேமில்’ இடம்பிடித்துள்ளனர்.

இதன் மூலம் ‘ஹால் ஆஃப் ஃபேமில்’ சேர்க்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. வீரேந்திர சேவாக் மற்றும் டயானா எடுல்ஜிக்கு முன் ஏழு இந்திய வீரர்கள் இந்த கவுரவத்தை பெற்றுள்ளனர்.

ஹால் ஆஃப் ஃபேமில்’ இடம் பெற்றுள்ள இந்தியர்கள்:

  • பிஷன் சிங் பேடி- 2009
  • சுனில் கவாஸ்கர்- 2009
  • கபில் தேவ்- 2010
  • அனில் கும்ப்ளே- 2015
  •  ராகுல் டிராவிட்- 2018
  •  சச்சின் டெண்டுல்கர்- 2019
  •  வினோ மங்காட் – 2021
  •  டயானா எடுல்ஜி- 2023
  •  வீரேந்தர் சேவாக்- 2023

சேவாக்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை: 

வீரேந்திர சேவாக் இந்தியா அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளிலும், 251 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வீரேந்திர சேவாக் இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் 8586 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை டிரிபிள் சதம் அடித்த ஒரே பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக். இது தவிர 23 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். அதேசமயம், ஒருநாள் போட்டிகளில் 8273 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அரைசதம் 38 , 15 சதங்களை அடித்துள்ளார். இந்திய அணிக்காக விரேந்திர சேவாக் 19 டி20 போட்டிகளில் 394 ரன்கள் குவித்துள்ளார்.