தென் மாவட்டங்களில் அதி கனமழை – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் முதல் இதுவரை இல்லாத வரலாறு காணாத அதி கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதி கனமழையால் ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழை, வெள்ள பாதுகாப்பு தொடர்பாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் தொடர் கனமழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் அதி கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு  எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை (ரொட்டி பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் பவுடர், உலர் பழங்கள், மளிகை பொருட்கள், பாய்கள், போர்வைகள், துண்டுகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், லுங்கிகள், நைட்டிகள், நேப்கின் பேடுகள் உள்ளிட்டவை) வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் 73977-66651 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு நிவாரணம் வழங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.