விமானப்படை தளபதி உயிரிழப்பு.. இரவு நேர தாக்குதல்.. போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்.!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 20 நாட்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் பாலஸ்தீனிய நாட்டின் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 7000 மக்கள் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இஸ்ரேல், வான்வெளி தாக்குதலை தொடர்ந்து, தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஹமாஸ் அமைப்பின் விமானப்படை தளபதியும், முக்கிய செயலாக்க அதிகாரியுமான அட்சம் அபூ ரஃபா இஸ்ரேல் ராணுவ விமானப்படை தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள எங்கள் ஊழியர்களுடனான தொடர்பை இழந்துவிட்டோம் – WHO தலைவர்!

மேலும் இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ஹமாஸ் குழுவின் வான்வெளிபடை தளபதியான  அட்சம் அபூ ரஃபா, ட்ரோன்கள், பாராகிளைடர்கள், வான் பாதுகாப்புக்கு பொறுப்பாக செயல்பட்டவர். அக்டோபர் 7ஆம் தேதி காசா பகுதியில் நடந்த படுகொலைகளுக்கு திட்டமிட்டவர். பாராகிளைடர்கள் மூலம் இஸ்ரேலுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வழிநடத்தினார் மற்றும் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்களுக்கு தலைமை வகித்தவர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸை அழிக்க ஒரே வழி அதன் காஸாவில் உள்ள சுரங்கப்பாதை வலையமைப்பை அழிப்பதே என்று குறிப்பிட்டு, ஒரே இரவில் காசாவில் தரைப்படை தாக்குதலை நேற்று இரவு இஸ்ரேல் ராணுவம் அதிகரித்துள்ளது. ஹமாஸுக்கு எதிரான போரில் வடக்கு காசாவில் 150 சுரங்கப்பாதை இலக்குகளை இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்கியதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.