தேர்தல் ஓவர்.! இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த கார்கே.!

மத்தியில் கடந்த 2 நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று பலமான ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை வீழ்த்த, காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் மெகா கூட்டணியை உருவாக்கினர்.

இந்த இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம், பீகார் தலைநகர் பாட்னாவில் பீகார் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் நடைபெற்றது.  அதன் பிறகு ஜூலையில் பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு   மும்பையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் இந்தியா எனும் கூட்டணி பெயரும், ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒருங்கிணைப்பாளர் என தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ராஜஸ்தானில் இழுபறி.. காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி.!

அதன் பிறகு டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டமும் நடைப்பெற்றது. இதனை அடுத்து 5 மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கிய காரணத்தால், இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் என்பது தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.  தற்போது 5 மாநில தேர்தல் முடிந்து இன்று 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ளதால், அடுத்து நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது எனவும் அதில் கட்சி தலைவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவிவுறுத்தியுள்ளார்.

4 மாநில தேர்தல் முடிவுகளில் தெலுங்கானாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம்  ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. அங்கு பாஜக முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.