சந்திரசேகர் ராவ் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்வாகம்..!

சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்தது. இதைதொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி சந்திரசேகர் ராவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தனது பண்ணை வீட்டில் இருந்து கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் சந்தித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சந்திரசேகர் ராவ் தனது பண்ணை வீட்டில் இரவு 11.30 மணியளவில் குளியலறையில் கால் தவறி விழுந்து காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் அருகில் இருந்த யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் உடனடியாக இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்தனர். சந்திரசேகர் ராவ் குணமடைய 6-8 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ், அறுவைசிகிச்சைக்குப் பிறகு நன்கு குணமடைந்து வருகிறார் அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்கள் சந்திரசேகர் ராவ் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். யசோதா மருத்துவமனை அருகே பாதுகாப்பை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.