ஆருத்ரா மோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை வருகை..!

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு ரூ.35 ஆயிரம் 10 மாதத்திற்கு வட்டி தரப்படும் என கூறினர். இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்தனர். அதன்படி சுமார் ஒரு லட்சம் பேரிடம் ரூ. 2438 கோடி முதலீடு பெற்று மோசடி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் நிறுவனத்தின் இயக்குனர்கள் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆருத்ரா மோசடியில் நடிகர் ஆர் கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆருத்ரா மோசடி விவகாரத்தில் நடிகர் ரூசோவிடம் நடிகர் ஆர்.கே. சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது அம்பலமானது.

இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவினர் பல முறை சம்மன் அனுப்பிய நிலையில் ஆர்.கே. சுரேஷ் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றும் தலைமறைவானார். பின்னர் நடிகர் ஆர். கே. சுரேஷ் உட்பட நான்கு பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த நடிகரும் ,பாஜக பிரமுகருமான ஆர் கே சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக சென்னை வருகை தந்துள்ளார்.

ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்ததால் விமான நிலையத்தில் ஆர் கே சுரேஷ் பிடித்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். நீதிமன்ற உத்தரவின்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராக வந்திருப்பதாக அவர்களிடம் ஆர்கே சுரேஷ் தெரிவித்தார். ஆர் கே சுரேஷ் அளித்த உறுதியை ஏற்று விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லகுடியுரிமை அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

நாளை மறுநாள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையிடம் ஆர் கே சுரேஷ் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

.