தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு.! உச்சநீதிமன்றத்தில் பாஜக கேவியேட் மனு.!

தமிழக அமைச்சர்களான தங்கம் தென்னரசு , பொன்முடி உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே முடித்துவைக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு விசாரணை நடந்து அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டதில் திருப்தி இல்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மீண்டும் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அமைச்சர்கள்  சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டுள்ளது. முடித்துவைக்கப்பட்ட வழக்கின் மீது மீண்டும் விசாரணை நடத்த தடைவிதிக்க வேண்டும் என அந்த மனுக்களில் கூறப்பட்டது.

ஆளுநர் பாஜககாரர்.. ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம்.! முதல்வர் பரபரப்பு குற்றசாட்டு.!

இந்த மனுக்களின் விசாரணை இன்னும் துவங்கப்படாத நிலையில் , தமிழக பாஜக சார்பில்  தனித்தனியாக கேவியேட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமைச்சர்களின் சொத்துகுவிப்பு வழக்கு மேல்முறையீடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது தங்கள் தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என கேவியேட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஏற்கனவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , முன்னதாக திமுக அமைச்சர்கள் சொத்துப்பட்டியல் என தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் , கேவியேட் மனுக்களில் எந்த மாதிரியான ஆவணங்களை தமிழக பாஜக தாக்கல் செய்ய உள்ளது என்பது அடுத்தகட்ட விசாரணைகளின் போது தெரியவரும்.