#Breaking:மகிழ்ச்சி…சான்றிதழ் பெற பழைய கட்டணமே வசூல் -அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

மாணவர்களின் கிரேடு,மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்,புதிய சான்று பெறுவதற்கான கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு விடுத்திருந்தது.

அதன்படி,தொலைந்துபோன கிரேட் Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும்,டிகிரி சான்றிதழுக்கான (Degree Certificate) கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.2-ஆம் முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பதற்கு கட்டணமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால்,அண்ணா பல்கலைக் கழகம் கட்டணத்தை உயர்த்தியதற்கு மாணவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில்,தொலைந்து போன சான்றிதழைப் பெற பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக,சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில்:”தொலைந்து போன சான்றிதழைப் பெற மாணவர்களிடம் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.அதன்படி,பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும்,பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.

இதனிடையே,அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் கலந்தாய்வா? என்பது குறித்து கல்வியாளர்களுடன் வரும் 17ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும்,நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பொறியியல் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி  கூறினார்.