புளூவேல் ஆன்லைன் விளையாட்டால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை! தொடரும் விபரீதம்…

புளூவேல் ஆன்லைன் விளையாட்டால் கேரள கல்லூரி மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் (வயது 20). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் கல்வி கற்று வந்துள்ளார்.
இவர் தனது படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த பொலிஸார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதில் அவர் தற்போது உலகத்தையே உலுக்கிப்போட்டு கொண்டிருக்கும் புளூவேல் என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதன் காரணமாக அவர் தனது கையில் ரத்தத்தில் திமிங்கலம் படத்தை வரைந்து இருந்தார். இந்த விளையாட்டின் முடிவில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று பொலிஸார் கருதுகிறார்கள்.
இந்த ஆன்லைன் விளையாட்டால் இதுவரை கேரள மாநிலத்தில் 3 கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த அனு என்பவரது மகன் மனோஜ் (19). கல்லூரி மாணவர். இவரும் கடந்த மாதம் 26-ந் திகதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கண்ணனூரை சேர்ந்த சவாந்த் (19) என்ற கல்லூரி மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தான் ஆஷிக் தற்கொலை செய்துள்ளார்.
புளூவேல் விளையாட்டுக்கு மத்திய அரசு தடைவிதித்தும் இந்த விளையாட்டு ஒழிந்த பாடில்லை. கேரள மாநிலத்தில் நிறைய மாணவர்கள் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். இது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆஷிக்கின் தாயார் அஸ்மாவி கண்ணீருடன் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆஷிக் தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவனுக்கு எந்த பிரச்சினையும் இல்லாத போது அவன் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
ஆனால் தற்போது இந்த ஆன்லைன் விளையாட்டு பலரை பலி வாங்கியதாக கேள்விப்பட்ட பின்னர் இதனால் தான் அவனும் இறந்திருப்பானே என்ற எண்ணம் எனக்குள் தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவனது செல்போனை எடுத்து பார்த்த போது அதில் அவன் கைகளில் ரத்தகாயம் ஏற்படுத்தியது, கடலில் நின்று செல்பி எடுப்பது, வீட்டின் மாடியில் இருந்து குதிப்பது, கல்குவாரி மேல் நிற்பது போன்ற படங்கள் இருந்தன.
இதெல்லாம் இந்த விளையாட்டின் ஒரு அங்கமாக இருக்கலாம் என நம்பினேன். எனது மகன் ஒரு விளையாட்டுக்காக உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான் எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment