நாளை மாலை நீதிமன்றத்தில் ஆஜராகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை மாலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப்படியலை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி பேசும் பொருளாக மாறியது.

அதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவதூறு பரப்புவதாக கூறி, திமுகவினர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதுமட்டுமில்லாமல் அண்ணாமலை மீது முதல்வர் உள்பட திமுகவினர் வழக்கு தொடுத்துள்ளனர்.

அந்தவகையில், அவதூறான கருத்துக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வழக்கு தொடுத்திருந்தார். திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாகவும், அவரது கருத்துக்கள் பொய்யானவை, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது எனவும் கூறியிருந்தார்.

டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில் ஜூலை 14-ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜரானார். இதன்பின் பேசிய அவர், பாஜகவின், ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும். தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது.

டி.ஆர். பாலு என் மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது. வழக்கிற்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்தி கொள்ள மாட்டேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். திமுக எம்பி டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜூலை 14ல் ஆஜரான நிலையில், நாளை மாலை மீண்டும் ஆஜராகுகிறார்.