அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா.? வானதி சீனிவாசன் விளக்கம்.! 

நேற்று கோவையில் சிட்பி MSME வங்கியின் புதிய கிளை திறப்பு விழா மற்றும் மத்திய அரசு சார்பில் 948 வங்கிகள் மூலம் 3,749 கோடி ரூபாய் அளவில் மெகா கடனுதவி விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து கலந்துகொண்டார். உடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் வந்திருந்தனர்.

இந்த விழாவுக்கு முன்னதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்களான பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் , வரதராஜ் ஆகியோர் சந்தித்து பேசினர். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் நடந்த இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியது.

ஆனால் இந்த சந்திப்பு குறித்து அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன்  கூறுகையில், இது அரசியல் ரீதியிலான சந்திப்பு அல்ல. தொகுதி தொடர்பான பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைத்தோம் என அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

இந்நிலையில், இன்று,  கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்றைய சந்திப்பு மற்றும் சிட்பி வங்கி கிளை திறப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார். அவர் கூறுகையில் , பொள்ளாச்சி ஜெயராமன் அவர் தொகுதி தென்னை விவசாயிகள் பற்றிய கோரிக்கைகளை முன்வைத்தார். அமுல் கந்தசாமி வால்பாறை பகுதி மலைவாழ் மக்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார். அதே போல ஏ.கே.செல்வராஜ் அவரது தொகுதியில் புதிய வங்கி கிளை வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு முன்னர், இவர்கள் மத்திய விவசாயத்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்தபோதும் நான் உடன் இருந்தேன். நேற்று நடந்தது அரசு நிகழ்ச்சி மட்டுமே. அதில் பங்கேற்க மக்கள் பிரதிநிதிகளுக்கு வங்கி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. நானும் நிறைய அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறேன்.

நேற்று கூட்டணி தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. கூட்டணி பற்றி எல்லாம் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என கூறினார். நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் ஆலோசனை கூட்டம் நடந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, தலைவர் இல்லாமல் அமைப்பு செயலாளர் உடன் கூட்டம் நடத்தலாம், ஏதேனும் முக்கியமான விஷயம் நடந்தால் கண்டிப்பாக சொல்வோம் எனவும் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் வானதி சீனிவாசன் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.