அதிமுக, பாஜக போட்ட நாடகத்தை கூச்சமின்றித் தொடருகின்றன- துரைமுருகன்..!

தமிழ்நாடு மக்களின் மீது தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மை மீது  மாணவச் சமுதாயத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் துடிதுடித்து அதிமுக பங்கேற்றிருக்க வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக தவிர்த்து மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், அதிமுக – பாஜக போட்ட நாடகத்தை கூச்சமின்றித் தொடருகின்றன. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலிகள் நடைபெறுகின்ற தேர்தலில் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். நீட் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பொய்யை சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கும் ஓபிஎஸ்-ன் செயல் கண்டனத்திற்குரியது.

27 மாதங்கள் மசோதா என்ன ஆனது என்றே கவலைப்படாமல் ஆட்சி நடத்திய அதிமுகவிற்கு, 142 நாட்களுக்குள் திமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இன்றைய அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதை உணர முடியாதுதான். தமிழ்நாடு மக்களின் மீது தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மை மீது  மாணவச் சமுதாயத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் துடிதுடித்து அதிமுக பங்கேற்றிருக்க வேண்டும்.

இது மாணவர்கள் கிளர்ந்தெழுந்து அறவழிப் போராட்டம் நடத்தி பல உயிர்த்தியாகங்களைச் செய்து தமிழ்மொழியை காப்பாற்றிய மண் என்பதை ஓ. பன்னீர்செல்வத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன்  என தெரிவித்துள்ளார்.