சோகத்திலும் ஒரு சந்தோசம் : உலகளவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.!

கடந்த டிசம்பர் மாதம் இறுதில் சீனாவில் உஹான் நகரில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வல்லரசு நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகிறது. இதனால் உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராடி வருகிறது. சீனாவை தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் நாடு விட்டு நாடு சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து, இதுவரை 10,18,920 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,292 ஆக அதிகரித்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவில் பாதிப்பு 2,45,373 பேரும், பலி 6,095 ஆகவும், இத்தாலியில் பாதிப்பு 1,15,242 பேரும், பலி 13,915 ஆகவும், ஸ்பெயினில் பாதிப்பு 1,12,065 பேரும், பலி 10,348 ஆகவும், ஜெர்மனில் பாதிப்பு 84,794 பேரும், பலி 1,107 ஆகவும், சீனாவில் பாதிப்பு 81,620 பேரும், பலி 3,322 ஆகவும், பிரான்ஸில் பாதிப்பு 59,105 பேரும், பலி 5,387 ஆகவும், ஈரானில் பாதிப்பு 50,468 பேரும், பலி 3,160 ஆகவும், இங்கிலாந்தில் பாதிப்பு 33,718 பேரும், பலி 2,921 ஆகவும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த சோகத்திலும் ஒரு சந்தோஷமான நிகழ்வு என்னவென்றால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2,13,525 பேர் குணமடைந்துள்ளார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.