டிரம்பின் அதிரடி முடிவுகள் : அவசர நிலை பிரகடனம் முதல்… பனாமா கால்வாய் வரை…

அமெரிக்க எல்லை பகுதியில் அவசர நிலை பிரகடனம் முதல் பனாமா கால்வாயை திரும்ப பெரும் திட்டம் வரை பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

US President Donald Trump

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்று கொண்டது முதல் பல்வேறு அதிரடியான முடிவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே கூறியது போல ‘அமெரிக்கா இனி அமெரிக்கர்களுக்கே’ எனும் கொள்கையை முன்னிறுத்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதில் மிக முக்கியமாக குடியேற்ற கொள்கையில் திருத்தம், சட்டவிரோத குடியேற்றம் தடுத்தல், இருபாலின கொள்கை போன்றவை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதில் சிலவற்றை கிழே காணலாம்…

இரு பாலின உத்தரவு :

அமெரிக்காவில் இனி ஆண் – பெண் ஆகிய இரு பாலினங்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படும் என்றும், ராணுவத்தில் இரு பாலினத்தவர்களை தவிர மாற்று பாலினத்தவர்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் அமெரிக்காவில் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

டிரம்ப்பின் இரு பாலின முடிவுக்கு சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தாலும், அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் மற்றும் அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோசியேஷன் உள்ளிட்ட மருத்துவ அமைப்புகள் எதிர்வினையாற்றியுள்ளன. பாலினம் என்பது ஆண் மற்றும் பெண்களை மட்டுமே கொண்ட அமைப்பு அல்ல எனக் கூறி வருகின்றனர்.

2021 கலவரம் :

ஜனவரி 6, 2021-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப்-ன் ஆதரவாளர்கள் அமெரிக்க கேபிடல் கட்டடத்தில் கலவரத்தில் ஈடுப்பட்டனர். தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, நடைபெற்ற இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 150 காவலர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 1500 பேர் (டிரம்ப் ஆதரவாளர்கள்) மீது வழக்கு பதியப்பட்டது. தற்போது அதிபராக பொறுப்பேற்றவுடன் அந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினார் அதிபர் டிரம்ப்.

WHO-ல் இருந்து வெளியேற்றம் :

உலக சுகாதார அமைப்பான WHO, கொரோனா காலத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தவில்லை என கூறி 2021-ல் டிரம்ப் அதிபராக இருந்த காலத்திலேயே WHO-ல் இருந்து அமெரிக்கா வெளியேறியதாக அறிவித்து இருந்தார். பின்னர் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் WHO-வில் அமெரிக்கா அங்கம் வகித்து வந்ததது. தற்போது மீண்டும் டிரம்ப் ஆட்சியில் WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக கையெழுத்திட்டுள்ளார்.

அவசரநிலை பிரகடனம் :

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா – மெக்சிகோ எல்லை பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது என டிரம்ப் அறிவித்தார்.  எல்லையை பலப்படுத்தவும், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறும் நபர்களை கூண்டோடு . வெளியேற்றவும் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பிறப்பால் குடியுரிமை ரத்து?

சட்ட விரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் பிறப்பால் அமெரிக்க குடியுரிமை பெரும் சட்டத்தை விரைவில் ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்தள்ளார். பெரும்பாலான நாடுகளில் பிறப்பால் அந்தந்த நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் குடியுரிமை  பெரும் சட்டம் அமலில் உள்ள நிலையில் டிரம்ப்பின் இந்த முடிவு சட்ட சிக்கலை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.

பாரிஸ் ஒப்பந்தம் :

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இனி ஆற்றல் சக்திகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.  மேலும், கட்டுப்பாடுகளை தளர்த்தி புதைபடிவ சுரங்கங்களில் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிரம்ப் அறிவித்தார்.

பனாமா கால்வாய் :

1914-ல் அமெரிக்காவால் கட்டிமுடிக்கப்பட்ட பனாமா கால்வாய், 85 ஆண்டுகளாக அமெரிகாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பிறகு டிசம்பர் 31, 1999-ல் அமெரிக்கா அதனை பனாமா அரசிடம் முழுதாக ஒப்படைந்தது.  அதனை குறிப்பிட்டு பேசிய அதிபர் டிரம்ப், தற்போது பனாமா கால்வாயில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால், பனாமாவிடம் கொடுத்த கால்வாயை அமெரிக்கா திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளும் என அறிவித்தார்.

பெயர் மாற்றம் :

மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்கா வளைகுடா என அழைக்கப்படும் என அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

மீண்டும் பணியில் ராணுவ வீரர்கள் :

கொரோனா காலத்தில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என்பதற்காக வேலையை விட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களை டிரம்ப் மீண்டும் பணியமர்த்தினார். அவர்களை, அமெரிக்கா – மெக்சிசோ  எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான எல்லை பாதுக்காப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்