உலகக்கோப்பைக்கான தங்கள் அணியை இன்னும் அறிவிக்காத 3 அணிகள்..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் ஐந்து மைதானங்களில் நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பைதொடரில் மொத்தம் 41 போட்டிகள் நடைபெற உள்ளன. 2024ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் தொடக்க போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி பெனோனியில் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்திய அணி தனது முதல் குரூப் ஆட்டத்தில் வங்கதேசத்தை ஜனவரி 20-ம் தேதி எதிர்கொள்கிறது. அதன் இரண்டாவது ஆட்டம் ஜனவரி 25ஆம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தியாவின் கடைசி குரூப் ஆட்டம் ஜனவரி 28ஆம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணிதான் அதிக முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.

இது தவிர, 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெறுள்ளனர்.நடப்பு சாம்பியனான இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. சி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவும், டி பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் நேபாளம் ஆகியவை உள்ளன. இந்நிலையில், நடப்பு சாம்பியனான இந்தியா உட்பட  13 நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துள்ளது. ஆனால் டி பிரிவில் இடம்பெற்றுள்ள நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி  தங்களது வீரர்களை இன்னும் அறிவிக்கவில்லை.