மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் – முதலமைச்சர் உத்தரவு…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து இன்று ஒரு செய்தி குறிப்பு வந்தது அதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி இறந்த 14 பேரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணநிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்து இருந்தது.அதன் விவரம் பின்வருமாறு :

  1. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், கல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி சரஸ்வதி என்கிற எலையக்கா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  2. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மகாராஜாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஆனந்தி மழையின் காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  3. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சக்திவேல் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
  4. சென்னை மாவட்டம், மயிலாப்பூர் வட்டம், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முகமதுஉசேன் மகன் ரபிஉசேன் தேங்கிய மழை நீரில் மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
  5. தண்டையார்பேட்டை வட்டம், கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
  6. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், மாதவலாயம் கிராமத்தைச் சேர்ந்த ரெத்தினராஜ் மின்கம்பத்தில் ஏறிய போது, மின்கம்பம் முறிந்து விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
  7. திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், பெரியபிள்ளை வலசை கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தேவர் மகன் கருப்பசாமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  8. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கெடகார அள்ளி கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் கோட்டீஸ்வரன் எதிர்பாராதவிதமாக மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
  9. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், நாரவாரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முகமது யூசுப் மகன் குத்புத்தீன் பலத்த காற்று மழையின் காரணமாக மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
  10. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், காப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ரேணு மனைவி கிருஷ்ணவேணி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
  11. தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சியில் பணிபுரிந்து வந்த பாலமுருகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
  12. உத்தமபாளையம் வட்டம், க.புதுப்பட்டி கிராமம், மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக பணியாளர் சுப்புராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
  13. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பகண்டை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் குமார் விவசாய நிலத்திற்கு சென்ற போது, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
  14. திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் வள்ளுவர் தென்னை மரக்கிளையை வெட்டும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

ஆகியோரின் உயிரிழப்பு அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

DINASUVADU 

Leave a Comment