பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.! கத்தாரிடம் இந்தியா தோல்வி.!

2026ம் ஆண்டுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 36 அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட்-ராபின் முறைப்படி போட்டியிட்டு வருகின்றன. அதன்படி, இந்திய அணி, கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இதில் சுனில் சேத்ரி தலைமையாலான இந்திய அணி, உலக தரவரிசையில் 61வது இடத்தில் உள்ள கத்தாரை நேற்று (செவ்வாய்க் கிழமை) எதிர்கொண்டது. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி, இந்தியா அணிக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை.

தொடக்கம் முதலே கத்தார் அணியின் கையில் போட்டி இருந்தது. இந்திய அணி திட்டமிட்டபடி வலுவானத் தொடக்கம் அமையவில்லை. தொடர்ந்து ஆட்டம் சென்றுகொண்டிருக்கையில், முஸ்தபா தரேக் மஷால் 4 வது நிமிடத்தில் கத்தார் அணிக்காக ஒரு கோல் அடித்தார். கோலைத் தடுக்க இந்திய அணி முயற்சி செய்தும் அது முடியவில்லை.

அதன்பிறகு அல்மோஸ் அலி 47வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 0-2 என்ற கணக்கில் இருந்தது. போட்டி முடியும் கட்டத்தில் 86வது நிமிடத்தில் யூசுப் அப்துரிசாக் கோல் அடித்த நிலையில் போட்டி 0 – 3 என்ற கணக்கில் முடிந்தது. இதனால் உலகக் கோப்பை கால்பந்து இரண்டாவது தகுதிச் சுற்றில் கத்தார் வெற்றி பெற்றது.

இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கத்தார் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்தியா தோல்வியுற்றதால் 2வது இடத்திலிருந்து 3 வது இடத்திற்கு சென்றது. முன்னதாக குவைத் அணியுடன் மோதி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.