யோகாவை தனி பாடமாக கொண்டு வர வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்

யோகா கோபத்தை கட்டுப்படுத்தும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து.

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டு இன்று (ஜூன் 21ம் தேதி) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வேத பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றை உலகம் முழுவதும் பரப்புவதற்காக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 9வது ஆண்டாக சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, அரசியல் தலைவர்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகள் அல்லது திறந்தவெளி இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யோகா செய்து வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி அரசின் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் யோகா மேற்கொண்டார்.

இதன்பின் இவ்விழாவில் பேசிய அவர், அனைத்து பள்ளிகளிலும் யோகாவை தனி பாடமாக கொண்டு வர வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு யோகா கற்றுக்கொடுப்பது நல்லது.

2 பிளேட் பிரியாணி சாப்பிட்டால் எவ்வளவு கொழுப்பு சேருமோ, அந்த அளவிற்கு கொழுப்பு கோபப்பட்டால் உடலில் சேரும். இதனால் யோகா கோபத்தை கட்டுப்படுத்தும் என்றும் புதுச்சேரி பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க அறிவுறுத்தியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

மேலும், அவரது ட்விட்டர் பதிவில், நம் உடலையும்,உள்ளத்தையும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்வதற்கு உதவும் யோகக் கலையை தினமும் கடைப்பிடிப்போம், மகிழ்ச்சியாக வாழ்வோம் என்றுள்ளார்.