WTC இறுதிப் போட்டி: இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது… ரிக்கி பாண்டிங் விமர்சனம்.!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மிகப்பெரிய தவறை செய்துள்ளது என்று ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் நிறைவு பெற்று தற்போது அனைவரின் கவனமும் உலக டெஸ்ட் இறுதிப்போட்டியை நோக்கி திரும்பியுள்ளது. உலகமே தற்போது மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023 இறுதிப்போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான சாம்பியன் யார் என்ற தேடலில், ஜூன் 7 முதல் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் மோதுவதற்கு இரு அணிகளும் ஏற்கனவே தங்கள் பயிற்சிகளை தொடங்கி விட்டனர். கடந்த முறை பைனலில் வந்து தோல்வியடைந்த இந்திய அணி இம்முறை எப்படியாவது சாம்பியன் பட்டம் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் அணியில் சிறு மாற்றத்தை தற்போது செய்துள்ளது.

அதாவது ரிசர்வ்(காத்திருப்பு) வீரர்கள் லிஸ்டில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. விளையாடும் வீரர்கள் அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் தேர்வுக்குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய தேர்வுக்குழுவினர் மிகப்பெரும் தவறை செய்துவிட்டனர், ஹர்திக் பாண்டியாவை அவர்கள் அணியில் சேர்க்கத் தவறிவிட்டனர். இது இந்திய அணி தவற விட்ட வாய்ப்பாகக் கருதுகிறேன் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஐசிசி ரிவியூவில் பேசிய ரிக்கி பாண்டிங், ஹர்திக் பாண்டியா தனது ஆல்ரவுண்டிங் திறமையால் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹர்திக், ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு திரும்பியதில் இருந்து பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் ஜொலித்து வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் கூட, ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீசுகிறார். மேலும் மேலும் அவர் வேகமாகவும் பந்துவீசுகிறார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒருவர் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார் என்று பாண்டிங் கூறினார்.

டெஸ்ட் மேட்ச் ஆட்டம் அவரது உடல் ரீதியாக கடினமாக இருப்பதாக அவர் கூறியது எனக்கு தெரியும், இருந்தும் ஒரு போட்டியில் ஹர்திக்கிற்கு வாய்ப்பு வழங்கினால், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அவரால் என்ன செய்ய முடியும் என்பது தெரியவரும், அவர் அணிக்கு ஒரு துருப்புச்சீட்டாக(X- Factor) இருப்பார் என்று பாண்டிங் தனது கருத்தை தெரிவித்தார்.

முன்னதாக ஹர்திக் பாண்டியாவிடம் டெஸ்ட் அணியில் இடம் குறித்து கேட்கப்பட்டபோது, நான் எனது திறமையால் அணியில் இடம்பிடிக்க வேண்டும். மற்றொருவர் இடத்தை நான் நிரப்பக்கூடாது என்று நினைக்கிறேன் என ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார்.