காங்கிரஸின் 5 தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்..! கர்நாடக முதல்வர் சித்தராமையா..

காங்கிரஸின் 5 தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை அளித்தது. இதன்பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. பின்னர் கர்நாடகா முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றனர்.

இதனையடுத்து, கர்நாடக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றவுடன், காங்கிரஸ் கட்சி அளித்த 5 வாக்குறுதிகள் ஓரிரு மணி நேரத்தில் சட்டமாகிவிடும் என்று என்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கூறினார். மேலும், காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது, நாங்கள் சொல்வதை நாங்கள் செய்கிறோம் என்று கூறினார்.

அதன்படி, கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

5 வாக்குறுதிகள் என்ன.?

  • ஒவ்வொரு வீட்டின் தலைவிக்கும் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 2,000 வழங்கப்படும்.
  • வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 மற்றும் வேலையில்லாத பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.
  • வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
  • கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
  • கர்நாடகாவில் பெண்கள் பயணம் செய்ய இலவச பேருந்து டிக்கெட்டுகள் வழங்கப்படும்.