மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க அமித்ஷா தயார்.! மத்திய அமைச்சர்கள் கருத்து.!

மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க அமித்ஷா தயார் என மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிருதி இராணி கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து ஒத்திவைப்பு, முடக்கம் எனும் செய்திகள் தான் வெளியாகி வருகின்றன .

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ‘ மணிப்பூர் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதிப்பார். அப்போது மணிப்பூர் போல, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கூறினார்.

அதே போல, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்ற வளாகத்தில் செய்டியாளர்களிடம் கூறுகையில், “மணிப்பூர் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவாதத்திற்கு தயார் என்று கூறியுள்ளார். மணிப்பூர் பிரச்சனையை முன்னெடுக்கும் எதிர்க்கட்சிகள் உண்மையை ஏன் விரும்பவில்லை. மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தான் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.