இது உண்மையிலேயே இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம்..! மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்..!

இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக இஸ்ரோ குழுவிற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட உலக நாடுகள் பல எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கான 25 மணி நேரம், 30 நிமிட என்ற ‘கவுன்ட் டவுன்’ நேற்று பிற்பகல் 1 மணிக்கு துவங்கிய நிலையில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இது உண்மையில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள நம் அனைவருக்கும் இது வரலாற்றின் ஒரு பகுதியாகும். இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக இஸ்ரோ குழுவிற்கு நன்றி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவின் கதவுகளைத் திறந்து, இந்தியாவின் விண்வெளித் துறையை செயல்படுத்துவதன் மூலம் இதை சாத்தியமாக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான்-3 விண்கலத்தில், நிலவில் தரையிறங்கும் ‘லேண்டர், ரோவர்’ போன்ற சாதனங்கள் மட்டும் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.