காங்கிரஸ் vs பாஜக vs மாநில கட்சிகள்.! விரைவில் அறிவிக்கப்படும் 5 மாநில தேர்தல் தேதிகள்.! கள நிலவரம் இதோ….

இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  அடுத்த ஆண்டு 2024 ஏப்ரல் – மேவில் நாடளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் இந்த 5 மாநில தேர்தல் என்பது மிக முக்கிய தேர்தலாக , பாஜக – காங்கிரஸ் கட்சிக்கு ஓர் முன்னோட்ட தேர்தல்களாக பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா,  மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தான் இந்த வருட இறுதிக்குள் சட்டபேரவை தேர்தல் வரவுள்ளது. இதில் 2 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும், ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சியையும், 2 மாநிலங்களில் மாநில கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன.

தேர்தல் நெருங்க உள்ளதால் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் மேற்பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரிகள் கலந்து ஆலோசித்து தேர்தலை எவ்வாறு நடத்துவது, கள நிலவரம் , எதனை கட்டங்களாக தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பது வழக்கம்

இந்த ஆலோசனை கூட்டமானது ஏற்கனவே மத்திய பிரதேதம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நிறைவுபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று தெலுங்கானாவிலும் இந்த ஆய்வு கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இதனால் விரைவில் 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறும் தேதி, வாக்கு எண்ணிக்கை, அதற்கு முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 மாநில மாநில அரசு நிலவரம் : 

தெலுங்கானா : 

மொத்தம் உள்ள 119 சட்டப்பேரவை இடங்களில் 88 இடங்களை தெலுங்கு ராஷ்டிரிய தளம் (TRS) கைப்பற்றி சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

மத்திய பிரதேசம் : 

மொத்தமுள்ள 230 இடங்களில் முதலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி கமல்நாத் முதல்வராக பொறுப்பெற்றார். அதன்பிறகு நடந்த அரசியல் நகர்வுகளால் இடைத்தேர்தல் ஏற்பட்டு அதில் பாஜக அதிக இடங்களை கைப்பபற்றி ஆட்சியை பிடித்தது. தற்போது அங்கு பாஜக சார்பில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார்.

ராஜஸ்தான் : 

மொத்தமுள்ள 200 இடங்களில் 100 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். 73 இடங்களை பாஜக கைப்பற்றி எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் : 

மொத்தமுள்ள 90 இடங்களில் 68 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி பூபேஷ் பாகல் முதல்வராக பொறுப்பில் இருக்கிறார். 15 இடங்களை கைப்பற்றி பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

மிசோராம் : 

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் மாநில கட்சியான மிசோராம் தேசிய முன்னற்ற (MNF) கட்சி 26 தொகுதிகளை கைப்பற்றி  ஜோரம்தங்கா முதல்வர் பொறுப்பில் இருக்கிறார்.  காங்கிரஸ் 5 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.