3 குழந்தைகள் இருப்பதை மறைத்த மேயர் பதவி நீக்கம்..!

பீகாரில் 3 குழந்தைகள் இருப்பதை மறைத்து மேயராக பதவியேற்ற ராக்கி குப்தா பதவி நீக்கம். 

பீகாரில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என்பது சட்டமாகும். இந்த நிலையில், பீகார் மாநில தேர்தல் ஆணையம் (எஸ்இசி)  3 குழந்தைகள் இருப்பதை மறைத்த மேயரை பதவி நீக்கம் செய்துள்ளது.

 சமீபத்தில், பீகார் மாநில சப்ரா நகர் மேயராக ராக்கி குப்தா பதவியேற்றார். 2022 ஆம் ஆண்டு தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், ராக்கி குப்தா தனது இரண்டு குழந்தைகளைப் பற்றிய தகவல்களை மட்டும் அளித்து, தனது மூன்றாவது குழந்தை பற்றிய தகவலை மறைத்தார். தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதை மறைத்து மேயராக பதவியேற்றுள்ளார்.

சரணின் மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) தனது அறிக்கையில், ராக்கி குப்தா மற்றும் அவரது கணவர் வருண் பிரகாஷ் ஆகியோருக்கு மூன்றாவது குழந்தை இருப்பதாக பீகார் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது. இருப்பினும், அந்த குழந்தை வருண் பிரகாஷின் உறவினர்களால் தத்தெடுக்கப்பட்டது என்று சரணின்  தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால், குழந்தையின் ஆதார் விவரங்களில் ராக்கி குப்தா மற்றும் வருண் பிரகாஷ் ஆகியோரின் பெயர்கள்  பெற்றோர்களாக உள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, மேயர்  ராக்கி குப்தா  பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் புதிய மேயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.