கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.! காங்கிரஸ் தலைவர் கார்கே திட்டவட்டம்.!

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெரும். கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார். 

நேற்று முன்தினம் கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் காங்கிரஸ் – பாஜக நேரடி போட்டியாக இருந்தாலும் மதசார்பற்ற ஜனதா தளம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால் நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகளை பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் கள நிலவரம் பற்றி அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அதில் அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி சாராத மக்களை சந்தித்துள்ளேன். எங்கள் கட்சி சார்பில் 3 கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளோம். இதன் அடிப்படையில் கூறுவதென்றால், காங்கிரஸ் இந்த முறை பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி மிக பெரிய வெற்றிபெறும். சுமார் 130 முதல் 140 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருகிறது ஆதலால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்டார்.

மேலும்  கர்நாடகாவில் முதல்வர் வேட்பாளர் சித்தராமையாவா? அல்லது டி.கே.சிவகுமாரா என்ற கேள்விக்கு, தனிநபர் செல்வாக்கு கட்சியை விட மேலானது இல்லை. தேர்தலில் வென்ற பிறகு முதல்வர் யார் என கட்சி மேலிடம் அதனை முடிவு செய்யும். வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், காங்கிரஸ் தலைமை கலந்து பேசி முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள். இப்போதே அதனை பற்றி பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.