எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சார்பாக, ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு, அதன் பிறகு அவர் ராஜினாமா செய்து, பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானார். பல்வேறு அரசியல் நகர்வுக்கு பின்னர் ஒன்றிணைந்த எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் , முறையே தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து வந்தனர்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 66 இடங்களை கைப்பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அப்போது எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமைத் தேர்தல் அதிகாரி!

அதன் பிறகு மீண்டும் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே பிரச்சனை உருவாகி, பிரியும் நிலை உருவானது. அதன் பிறகு எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமார் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக அறிவிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து சபாநாயகர் அப்பாவுவிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இருந்தும் கடந்த முறையிலான சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரையில் எதிர்க்கட்சி துணை தலைவர் நாற்காலியில் ஓ.பன்னீர்செல்வம் தான் அமர்ந்துள்ளார். இந்நிலையில் பல முறை சபாநாயகரிடம் முறையிட்டும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அதிமுக தரப்பு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் பல முறை கோரிக்கை வைத்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் எதிர்க்கட்சி துணை தலைவராக எவ்வாறு செயல்பட முடியும். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டபேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.