சென்னையில் நடைபாதைகளில் 7 இடங்களில் ரூ.45 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்-அமைச்சர் வேலுமணி அறிவிப்பு

சென்னையில் நடைபாதைகளில் 7 இடங்களில் ரூ.45 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.அப்பொழுது அமைச்சர் வேலுமணி உரையாற்றினார்.அவரது உரையில், திருநெல்வேலி மாவட்டம் – நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 8 பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து ரூ.131 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை எளிதாக்கும் வகையில் நடைபாதைகளில் 7 இடங்களில் ரூ.45 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.

திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.238 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஆகிய ஒன்றியங்களில் ரூ.275 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.வேலூர், ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய 3 மாநகராட்சிகளில் ரூ.128 கோடி மதிப்பில் நகர்ப்புற வடிவமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.