ஆபரேஷன் கங்கா: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் மீட்கப்படுவர் – பிரதமர் மோடி

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க அரசு அயராது உழைத்து வருகிறது என்று பிரதமர் மோடி பேச்சு.

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது பஸ்தி என்ற இடத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு இரவு, பகலாக உழைத்து வருகிறது. ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் இருந்து சுமார் 1000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

உலகில் எந்த முனையில் பிரச்னை என்றாலும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் இருந்து மீட்டு ஆயிரக்கணக்கான இந்தியர்களை தாயகம் அழைத்து வந்து கொண்டிருக்கிறோம் என்றும் நமது மகன்கள்,மகள்கள், தங்கைகள் உக்ரைனில் இருந்து மீட்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, உக்ரைனில் இருந்து ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டன. ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் 3-வது விமானம் டெல்லியில் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது.