அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் பலி! 83 பேர் அடையாளம் காணப்படவில்லை!

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒடிசா அரசு.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த மூன்று ரயில்கள் விபத்தில், 278 பயணிகள் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியிருந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குழப்பம் இருந்ததால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என ஒடிசா அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்பு 288-ல் இருந்து 275-ஆக உயிரிழப்புகள் எண்ணிக்கை என கூறப்பட்ட நிலையில், மீண்டும் உயிரிழப்பின் எண்ணிக்கை 288 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா, மாவட்ட மருத்துவமனைகள், பிணவறைகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிக்கைகளின் சமரசத்திற்குப் பிறகு, பாலசோரின் ஆட்சியர் 288 இறப்பு எண்ணிக்கையை உறுதி செய்துள்ளார் என தெரிவித்தார்.

விபத்தில் இறந்த 288 பேரில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 83 பேர் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் உடல்களை அடையாளம் காணுவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.