எந்த கட்சியாக இருந்தாலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், மகளிர் உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறைகளை ஆதாரத்துடன் சொல்லுங்கள், நிவர்த்தி செய்கிறோம்.  மேல்முறையீடு செய்பவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக சொல்கிறீர்கள், ஆதாரங்களை கொடுங்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நிதி நிலைமை சரியாக இருந்திருந்தால் அடுத்த நிமிடமே மகளிர் உரிமை தொகையை அளித்திருப்போம்; ஆனால், நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தரவுகளை சேகரித்து சரியான நேரத்தில் திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளோம்.

இப்போது மேலும் 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து இருக்கிறார்கள். அதையும் நாங்கள் பரிசீலிப்போம்; தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயம் தொகை வழங்கப்படும். எந்த கட்சியாக இருந்தாலும் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை உறுதியாக வழங்கப்படும்.

பயனாளிகள் அதிமுகவினரா அல்லது வேறு கட்சியா என்றெல்லாம் பார்க்கமாட்டோம், இதுவரை 1.06 கோடிக்கும் அதிகமானோருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.