“திருமண உதவித் திட்டம் மாற்றம்;மகளிர் இலவச பயணத்திற்கு நிதி ஒதுக்கீடு” – நிதியமைச்சர் பிடிஆர்!

2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.அப்போது,மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் இனி “மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம்” என மாற்றப்படுகின்றது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க , அரசுப் பள்ளி மாணவியர், கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்,மாநகர பேருந்துகளை மகளிர் பயன்படுத்துவது 40% லிருந்து  60 ஆக அதிகரித்துள்ளது என்றும் மாநகர பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள மானியமாக ரூ.1,520 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.