மணிப்பூர் கலவரம் – விசாரணை ஆணையத்தை அமைத்தது மத்திய உள்துறை அமைச்சகம்!

மணிப்பூர் கலவர வழக்கில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்று  மத்திய உள்துறை அமைச்சர் பேட்டி.

மணிப்பூர் கலவரம் தொடர்பான நிலவரம் குறித்து ஆராய அம்மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றிருந்தார். அப்போது, கடந்த ஒரு மாதத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதன்பின், கலவரம் தொடர்பாக மணிப்பூர் அரசு, சமூக அமைப்புகள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்தியில் பேசிய அமித்ஷா, மணிப்பூரில் நிலவும் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு. மணிப்பூர் கலவர வழக்கில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த மணிப்பூரில் பல ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், மணிப்பூர் கலவரம் தொடர்பான 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும்.

விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்வோம் என தெரிவித்த அவர், மணிப்பூர் ஆளுநர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் கொண்ட அமைதி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார். மக்களுக்கு உதவவும், மாநிலத்தின் நிலைமையை ஆய்வு செய்யவும், உள்துறை அமைச்சகம் மற்றும் பிற அமைச்சகங்களின் இணைச் செயலாளர் மற்றும் இணை இயக்குநர் அளவிலான அதிகாரிகள் மணிப்பூரில் இருப்பார்கள்.

மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 20 மருத்துவர்கள் உட்பட 8 மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவை மணிப்பூருக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. 5 குழுக்கள் ஏற்கனவே இங்கு வந்துள்ளன, மேலும் 3 குழுக்கள் வந்து கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்தார். கல்வி அதிகாரிகள் மாநிலத்திற்கு வந்து, மாணவர்களுக்கு தடையில்லா கல்வி வசதிகளை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள், ஆன்லைன் கல்வி மற்றும் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.

மணிப்பூர் மக்கள் போலியான செய்திகளுக்கு செவி சாய்க்க வேண்டாம். சஸ்பென்ஷன் ஆஃப் ஆபரேஷன்ஸ் (SoO) ஒப்பந்தத்தை மீறுபவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். ஆயுதம் ஏந்தியவர்கள், காவல்துறையில் சரணடைய வேண்டும், யாரிடமாவது ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆயுதங்களை யாரேனும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தால், அதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். எந்தவித பாரபட்சமும் இன்றி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என கூறினார். மேலும், மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். கலவரத்தில் காயமடைந்தோர், சொத்துக்களை இழந்தோருக்கு நாளை நிவாரணம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. மணிப்பூர் வன்முறையில் இதுவரை சுமார் 70 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூரில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.