மம்தா பானர்ஜி “இரக்கமற்றவர்”..! திரிணாமுல் காங்கிரஸை கடுமையாக சாடிய பாஜக செய்தி தொடர்பாளர்..!

மம்தா பானர்ஜி இரக்கமற்றவர் என திரிணாமுல் காங்கிரஸை, பாஜக செய்தி தொடர்பாளர் கடுமையாக சாடியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜூன் 8ம் தேதி காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. உள்ளாட்சி தேர்தல் அறிவித்த நாள் முதல் தற்போது வரை மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த பயங்கர வன்முறைக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே வாக்குச் சாவடி சேதப்படுத்தப்பட்டு, வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு மத்தியில் வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்ட 19 மாவட்டங்களில் உள்ள 696 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ஊடக அறிக்கைகளின்படி, பஞ்சாயத்து தேர்தல் வன்முறையின் போது குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டனர். குண்டுவெடிப்பு, போலி வாக்குப்பதிவு மற்றும் மோசடி ஆகியவை ஊடக அறிக்கைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் என்று கூறினார்.

மேலும், இவை அரசு ஆதரவுடன் நடத்தப்படும் கொலைகள். இரக்கமற்ற மம்தா பானர்ஜி, ஒரு ஊமைப் பார்வையாளராக இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையில், இந்த உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களுக்கும், 9,730 பஞ்சாயத்து ஊர் தலைவர் மற்றும் 928 மாவட்ட உள்ளாட்சி அமைப்பு இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.