இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர்: காஸாவில் 1688 குழந்தைகள் உயிரிழப்பு.! பாலஸ்தீன வெளியுறவுத்துறை தகவல்..!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி சனிக்கிழமையில் இருந்து போர் நடைபெற்று வருகிறது. முதலில் பாலஸ்தீனத்தின் காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் மீது 16 நாட்களாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று வரும் போரில், இரு தரப்பிலிருந்தும் குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இருப்பது காஸாவில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் ஆவர்.

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில், குறைந்தது 4,137 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12,065 மக்கள் காயமடைந்து உள்ளனர். இதற்கிடையில் இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மட்டுமே 1,600 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான UNICEF இயக்குநர் அறிவித்திருந்தார்.

இந்த எண்ணிக்கை இப்பொழுது அதிகரித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 7ம் தேதி முதல் மேற்குக்கரை மற்றும் காசா பகுதியில், இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதலில் இதுவரை சுமார் 1688 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு நாளைக்கு 120 குழந்தைகள் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலின் தாக்குதல் காஸாவில் தண்ணீர், உணவு, மின்சாரம் மற்றும் மருத்துவப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காஸாவிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.