10வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்! இஸ்ரேலின் தாக்குதலில் 2,670 பேர் பலி!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி (சனிக்கிழமை) இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். காசாவில் இருந்து ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் இஸ்ரேலியன் நகருக்குள் ஊடுருவியும் பயங்கர தாக்குதலை நடத்தினர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் தொடங்கியது.

ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று போர் பிரகடனம் எடுத்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது பல்வேறு விதமாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கமும் ஒடுக்கப்படும் என கூறி இஸ்ரேல் படை கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக காசா பகுதியில் வான்வழி, தரைவழி, ஹமாஸ் அமைப்பின் சுரங்கபாதைகள், பதுங்கு குழிகள் என பல்வேறு கோணங்களில் கடுமையான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.

காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது – பைடன் கருத்து

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் 10வது நாளாக இன்றும் நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலியன் தாக்குதலில் காசா நகரில் 2.670 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய யூத மக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 9,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழக்கும் அபாயம்!! காசாவில் 20 லட்சம் மக்கள் தண்ணீரின்றி தவிப்பு – ஐநா கவலை!

தொடர்ந்து தாக்குதல் அரங்கேறி வருவதால், காசா மக்கள் வெளியேற ஏதுவாக இன்னும் சில மணி நேரத்தில் ராஃபா எல்லை விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காசா பகுதியில் மக்கள் வெளியேற வேண்டும் எனவும் இஸ்ரேல் கெடு வைத்திருந்தது. எகிப்து எல்லையில் 5 கி.மீ நீளத்திற்கு வாகனங்களில் பாலஸ்தீன மக்கள் அணிவகுத்து நிற்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, போர் தீவிரமடைந்து வருவதால் அங்கு சிக்கியிருக்கும் வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் மீட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.